முன்னாள் துணை ஜனாதிபதி ஷெகாவத் மரணம்
முன்னாள் துணை ஜனாதிபதி ஷெகாவத் மரணம்
முன்னாள் துணை ஜனாதிபதி ஷெகாவத் மரணம்

ஜெய்ப்பூர்: முன்னாள் துணை ஜனாதிபதியும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான பைரான் சிங் ஷெகாவத், மாரடைப்பால் நேற்று காலமானார்.
ஜெய்ப்பூர் சிவில் லைனில் உள்ள ஷெகாவத்தின் வீட்டில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று அவரது உடல் பா.ஜ., அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு அவருக்கு அஞ்சலி செலுத்தப்படும். அதைத் தொடர்ந்து இறுதிச் சடங்குகள் நடக்கவுள்ளன. அரசியல் வேறுபாடுகளை கடந்து, அனைவருடனும் அன்பாக பழகி வந்த ஷெகாவத்தின் மறைவு, அனைத்து கட்சியினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஷெகாவத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளார். பா.ஜ.,வின் மற்ற மூத்த தலைவர்களும் ஜெய்ப்பூர் விரைந்துள்ளனர்.
பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான ஷெகாவத், மூன்று முறை ராஜஸ்தான் மாநில முதல்வராக பதவி வகித்துள்ளார். போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றிய ஷெகாவத், தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் குதித்தார். ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் தொடர்ச்சியாக அதிக முறை வெற்றி பெற்ற ஒரே தலைவர் ஷெகாவத் தான். கடந்த 1974ல் ராஜ்யசபா உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். ஷெகாவத்துக்கு சுராஜ் கன்வர் என்ற மனைவியும், ரத்தன் கன்வர் என்ற மகளும் உள்ளனர். இவரது மருமகன், ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ.,வாக உள்ளார். ஷெகாவத்தின் மறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஷெகாவத்துக்கு தலைவர்கள் இரங்கல்
முன்னாள் துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, முன்னாள் துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத் மனைவிக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில்,"உங்கள் கணவர் இறந்த செய்தியை கேட்டு, அதிர்ச்சி அடைந்தேன். மிக சிறந்த நிர்வாகியான பைரோன் சிங் ஷெகாவத், மிக எளிமையானவர். ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பாடுபட்டவர்,' என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். ராஜஸ்தான் மாநிலத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் 1923ம் ஆண்டில் பிறந்த பைரோன் சிங் ஷெகாவத், பொதுவாழ்வில் ஈடுபட்டு, அயராத உழைப்பால் ராஜஸ்தான் மாநில மக்களின் நம்பிக்கையை பெற்று, அம்மாநில முதல்வராக மூன்றுமுறை விளங்கியவர்,' என்று தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,"முன்னாள் துணை ஜனாதிபதியும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான பைரோன் சிங் ஷெகாவத் மறைவை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவு நாட்டுக்கு பேரிழப்பு. நாடு மிகச்சிறந்த தலைவரை இழந்துவிட்டது,' என்று குறிப்பிட்டுள்ளார்.